உலக மக்களை சீர்திருத்த ஏராளமான தலைவர்கள் இவ்வுலகில் தோன்றி மறைந்தள்ளனர். அவர்களின் கொள்கைளும் கோட்பாடுகளும் அறிவுரைகளும் மக்களின் மனதில் இடம்பெறவில்லை. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அரபுலுகில் தோன்றிய இறுதித் தூதர் நபிகளார் அவர்களின் கொள்கைளும் அறிவுரைகளும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.
நபிகளார் செய்த தீர்த்திருத்தங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள அன்றைய கால மக்களின் நிலையை தெரிந்து கொள்வது அவசியமாகும். அவர்கள் ஒழுக்கத்தில் எப்படியிருந்தார்கள் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் உதவி மூலம் அறிந்துகொள்வோம்.
ஒழுக்கத்திற்கு வித்திடும் திருமணம் அன்றைய கால மக்களிடம் எப்படி இருந்தது என்பதை பின்வரும் நபிமொழி தெளிவாக விளக்கிறது.
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:
முதல் வகை
இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி "மஹ்ர்' (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.
இரண்டாம் வகைத் திருமணம்:
ஒருவர் தம் மனைவியிடம், "நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக்கொள்வதற்காக) அவருடன் உடலுறவுகொள்ளக் கேட்டுக்கொள்!' என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவுகொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்றவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்ட மாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால்,விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவுகொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு "நிகாஹுல் இஸ்திப்ளாஉ' (விரும்பிப்பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.
மூன்றாம் வகைத் திருமணம்:
பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாகி சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் "நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்து விட்டது'' என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) "இவன் உங்கள் மகன், இன்னாரே!'' என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.
நான்காம் வகைத் திருமணம் :
நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவுகொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள். இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே,அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு "அவருடைய மகன்' என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.
சத்திய (மார்க்க)த்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்.
(நூல் : புகாரி 5127)
(நூல் : புகாரி 5127)
திருமணம் என்ற பெயரில் தெளிவான விபச்சாரம் நடந்துள்ளதை அவர்களின் திருமணம் முறை மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. மேலும் கணவனே தம் மனைவியை விபச்சாரத்திற்கு தள்ளும்கொடுமைகளும் அந்தக் காலத்தில் நடந்திருப்பதை இந்த நபிமொழி அழகுற விளக்குகிறது.
இதைப் போன்று வாடகை மனைவிகளும் இருந்துள்ளனர். குறிப்பிட்ட சில நாட்களுக்கு குறிப்பிட்ட தொகைகைக் கொடுத்து அந்த பெண்ணை பயன்படுத்திக்கொள்ளும் முறையும் அந்த காலத்தில் இருந்துள்ளது. இதற்கு முத்ஆ என்று குறிப்பிடுவர்.
அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முத்அத்துன்னிஸா'' (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் எனவும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் எனவும் தடை விதித்தார்கள். நூல் : புகாரி (4216)
படைத்தனை வணங்குவதற்கு உருவாக்கப்பட்ட முதல் ஆலயத்தில் கூட நிர்வாணமாக வலம் வந்த கொடுமையும் அரபுலகில் நடந்தள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அறியாமைக் காலப்) பெண்கள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகச் சுற்றி (தவாஃப்) வருவார்கள். நூல் : முஸ்லி-ம் (5762)
உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது: (அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) அரபுகள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகவே சுற்றிவருவார்கள். "ஹும்ஸ்' (கடினமான சமயப் பற்றுடையவர்)களைத் தவிர! "ஹும்ஸ்' என்போர் குறைஷியரும் அவர்கள் பெற்றெடுத்த மக்களும் ஆவர். அரபுகள் நிர்வாணமாகவே (கஅபாவைச்) சுற்றிவருவார்கள். ஹும்ஸ்கள் ஏதேனும் ஆடை வழங்கினால் தவிர! ஆண்கள் ஆண்களுக்கும், பெண்கள் பெண்களுக்கும் ஆடை வழங்குவதுண்டு. கடினமான சமயப் பற்றுடைய ஹும்ஸ்கள் (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) முஸ்தலிஃபாவிலிருந்து வெளியேறமாட்டார்கள். மற்ற அரபுகள் அனைவரும் அரஃபாத் சென்றடை(ந்து அங்கு தங்கு)வார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஹும்ஸ்களைப் பற்றியே அல்லாஹ் "பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்'' என்று கூறுகின்றான். (அரபு) மக்கள் அனைவரும் அரஃபாவிலிருந்தே திரும்பிச்செல்வார்கள். ஹும்ஸ்கள் மட்டும் முஸ்தலிஃபாவி-லிருந்து திரும்பிச்செல்வார்கள். அவர்கள், "நாங்கள் "ஹரம்' (புனித) எல்லையிலிருந்தே திரும்பிச்செல்வோம்'' என்று கூறுவார்கள். பின்னர் இந்த வசனம் (2:199) அருளப் பெற்றதும் அரஃபாத்திலிருந்தே அவர்களும் திரும்பிச்சென்றனர். நூல் : முஸ்-லிம் (2339)
இது போன்ற ஒழுக்கக் கேடுகள் நிறைந்திருந்த கால கட்டத்தில் அவர்களிடம் அழகிய அறிவுரைகள் மூலம் மக்களை ஒழுக்க சீலராக மாற்றிக் காட்டினார்கள்.
அனுமதிபெற்று செல்க
அடுத்தவர்களின் வீடுகளில் அனுமதியில்லாமல் திடீரென நுழைவதின் காரணத்தால் ஏற்படும் ஒழுக்கக் கேடுகளை தடுக்கும் வண்ணம் அனுமதி பெற்று செல்ல திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.
அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 24:27,28)
இதைப்போன்று அடுத்தவர்களின் வீடுகளில் எட்டிப்பார்ப்பதையும் நபிகளார் தடைசெய்தார்கள்.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் ஒரு துவாரத்தின் வழியாக ஒருவர் எட்டிப் பார்த்தார். நபி (ஸல்)அவர்களுடன் ஈர்வலிச் சீப்பு ஒன்று இருந்தது. அதனால் தமது தலையை அவர்கள் கோதிக்கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், "நீ (துவாரத்தின் வழியாகப்) பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணில் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது''என்று சொன்னார்கள். (நூல் : புகாரி (6241
பிள்ளைகளின் மனதில்கூட கெட்ட எண்ணம் வராதவகையில் ஆடைகளையும் அவர்கள் பார்ப்பதையும் தணிக்கை செய்யுமாறு திருக்குர்ஆன் வலியுறுத்துக்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 24:58)
தெருக்களில் ஒழுக்கம் பேணுங்கள்
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: "நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்''என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப்
பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.
(நூல் : புகாரி (2465)
ஆணும் பெண்ணும் தனித்திருக்க வேண்டாம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்'' என்று கூறினார்கள். (நூல் : புகாரி (3006)
உக்பா பின் ஆமிர் (ர-லி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள். (நூல் : புகாரி (5232)
கடும் தண்டனை
ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையை திருக்குர்ஆன் வழங்குகிறது.
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ் விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன் 24:2)
ஒழுக்கம் பேணிய நபிகளார்
ஆன்மீகத் தலைவர் என்பதால் மக்களின் கூட்டம் நபிகளாரை சந்திப்பதும் அவர்களிடம் ஆலோசனை பெறுவதும் வழக்கம். இதைப்போன்று இஸ்லாத்தை ஏற்பதாக உறுமொழி வழங்குபவர்களும் ஏராளம். இவர்களில் பெண்களும் அடக்கம். பெண்களிடம் உறுமொழி வாங்கும்போதுகூட அவர்களின் கை, பெண்களின் கையில் படாதவாறு நடந்து கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள்.
இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக்கொண்டாரோ அவரிடம் "உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்'' என்று பேச்சால் மட்டுமே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், "நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்'' என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.
நூல் ; புகாரி (4891)
இவ்வாறு ஒழுக்கக் கேடுகளை அழித்து அழகிய நல்வாழ்க்கையை மக்களுக்கு காட்டியவர்களில் முதலிடம் நபிகளாருக்கே என்றால் அது மிகையாகாது.
நன்றி: தீன்குலப்பெண்மனி மாத இதழ்
No comments:
Post a Comment