காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் இறுதித் திருமறையில் கூறுகின்றான்...
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! [அல்குர்ஆன் 9:36]
இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத்திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர் களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் காரியங்களெல்லாம் நம்மை நரகப்படுகுழியில் தள்ளிவிடக்கூடியவை என்பதை அறியாமல் இன்றும் அதிகமான இஸ்லாமியர்கள் முஹர்ரம் மாதத்தின் பெயரால் பல பாவமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.