.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Monday, October 15, 2012

குர்பானியின் சட்டங்கள்


குர்பானியின் நோக்கம் 
இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனுக்காக தன்னுடைய மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடுவதற்கு முன்வந்தார்கள். அல்லாஹ் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை ஏற்றுக்கொண்டு இஸ்மாயில் (அலை) அவர்களைப் பலியிடுவதற்குப் பதிலாக ஒரு பிராணியை அறுத்துப் பலியிடுமாறு கட்டளையிட்டான். (பார்க்க அல்குர்ஆன் 37 : 100  111) இப்ராஹிம் (அலை) அவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு குர்பானி என்ற வணக்கம் நிறைவேற்றப்படுகிறது.
அனைவரும்இறைவனை அஞ்சிவாழ்பவர்களாக மாறவேண்டும் என்பதுதான் இந்தக் குர்பானி வணக்கத்தின் முக்கியமான நோக்கமாகும்.
அவற்றின் மாமிசங்களோஅவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!           அல்குர்ஆன்(22 : 37)

குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை
ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக்கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.(அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) நூல் நஸயீ (4285)

குர்பானி யார் மீது கடமை?
குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும்.வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். குர்பானிப் பிராணிகளில் ஒன்றை வாங்கி குர்பானி கொடுப்பதற்கோ அல்லது கூட்டுக்குர்பானியில் சேர சக்தியுடைய அனைவரின் மீதும் குர்பானி கட்டாயக் கடமையாகும்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பானி போதுமானதாகும். அவர்களாக விரும்பி எத்தனை பிராணிகளை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம். திருமணமான பலர் ஒரே நிர்வாகமாக இருந்தால் அது ஒரு குடும்பமாகத்தான் கருதப்படும். அதே நேரத்தில் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனி நிர்வாகமாக இருந்தால் அவை தனித்தனி குடும்பமாகத்தான் கருதப்படும்.
 குர்பானிப் பிராணிகள்

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் ஏதாவது ஒன்றைத்தான் குர்பானி கொடுக்க வேண்டும். நமதூரில் சேவல், கோழி போன்றவற்றை குர்பானி கொடுக்கின்றனர். இது ஹஜ்ஜூப் பெருநாள் குர்பானியில் சேராது.
நீங்கள் “முஸின்னத்“தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர! அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் “ஜத்அத்“ தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி)  நூல் முஸ்லிம் (3631)

முஸின்னத்” என்பது இனவிருத்தி செய்வதற்காக பருவ வயதை அடைந்த பிராணியாகும். பருவ வயதை அடைந்த ஆடு, மாடு, ஒட்டகத்தை குர்பானி கொடுப்பதுதான் சிறந்ததாகும். எனவே பல் விழுந்துள்ளதா என்பதைக் கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும். அதாவது பிறக்கும் போது இருந்த பற்கள் விழுந்து உறுதியான பற்கள் முளைப்பதையே பல்விழுதல் என்று கூறப்படும்.

அடுத்து ஜத்வு என்பதையும் கொடுக்கலாம் என்று ஹதீஸ்களில் வந்துள்ளது.  ஜத்வு என்பது முஸின்னாவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாகும். அதாவது முஸின்னாவின்நிலைக்கு நெருக்கமான நிலைக்கு வந்ததாகும். அதாவது பருவமடைதவற்கு நெருக்கநிலையிலுள்ள பிராணியாகும். ஆறு மாதம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. முஸின்னா இல்லையானால் அல்லது முஸின்னா ஆட்டை,மாட்டை வாங்குவதற்குரிய வசதியில்லையானால் முஸின்னாவிற்கு முந்தைய நிலையில் உள்ள ஜத்வு வகையைக்கொடுக்கலாம்.

எவற்றை குர்பானி கொடுக்கக் கூடாது?
தெளிவான குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவை அல்ல. வெளிப்படையாகத் தெரியக் கூடிய குருட்டுத் தன்மை, வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம், தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்தவை ஆகியவற்றை குர்பானி கொடுக்கக் கூடாது. வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதை குர்பானிகொடுப்பதில் தவறில்லை. அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை. 
குர்பானி கொடுக்கும் நேரம் மற்றும் நாட்கள்
பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் குர்பானி கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் அறுத்தால் அது குர்பானி ஆகாது. நமது கடையநல்லூரில் தொழுகைக்கு முன்னால் அறுத்தால் “உலூஹிய்யா” என்றும் பின்னால் அறுத்தால் “குர்பானி“ என்றும் பிரிக்கின்றனர். இது அறியாமையாகும். “உலூஹிய்யா”  ”குர்பானிஇரண்டும் ஒன்றுதான். பெருநாள் தொழுகைக்குப் பின்னால் அறுத்தால்தான் குர்பானியாகும்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.
குர்பானிப் பிராணியை அறுத்தல்


குர்பானிப் பிராணியை அறுக்கும் போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்“ என்று கூறியே அறுக்க வேண்டும். குர்பானி பிராணிகளின் சொந்தக்காரரே அறுக்கலாம். அறுப்பதற்கு யாருமில்லையென்றால் முஸ்லிமான ஆணோ, பெண்ணோ யார் வேண்டுமானாலும் அறுக்கலாம். ஹஜ்ரத்மார்கள் அறுக்க வேண்டும் என்பது கிடையாது. 

மேலும் குர்பானி பிராணியை குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கொம்பில் பூ சுற்றுவது, வாயில் பாலூற்றுதல், இறைச்சியை வைத்து பாத்திஹா ஓதுவது போன்றவை நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தான காரியங்களாகும். இவற்றை செய்வது கூடாது. மேலும் கூர்மையான கத்தியால் பிராணியை அறுப்பது நபிவழியாகும். 
பங்கிடுதல்
22 : 28 வது வசனத்தில் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியைப் பற்றி குறிப்பிடும் போது “ நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள்“ என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்கவேண்டும்.சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும்இல்லை.
கூட்டுக் குர்பானி
கூட்டாகக் குர்பானி கொடுப்பதும நபிவழியாகும். மாட்டில் அதிகபட்சம் 7 நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதிகபட்சம் 7 நபர்கள் என்பதின் கருத்து 7-க்கு அதிகமானோர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கக் கூடாது என்பதுதான். 7 க்கு குறைவானவர்கள் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் ஹூதைபியா உடன்படிக்கை ஏற்பட்ட வருடம் 7 நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், 7 நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.(நூல்  : முஸ்லிம் (2323)
குர்பானி தோல் 
நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியை பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகிய அனைத்தையும் (ஏழைகளுக்கு) விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து, அறுத்து, பங்கிடக்கூடியவருக்கு கூலியாக அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக் கூடாது எனவும் கட்டளையிட்டார்கள்.(நூல் : புகாரி (1717)

நமது கடையநல்லூரில் தோல்களை கட்சிகளுக்கோ, பள்ளிகளுக்கோ வழங்குகின்றனர். அவை முறையாக ஏழைகளுக்குச் சென்றடைவதில்லை. குர்பானித் தோல் ஏழைகளுக்கு உரித்தானதாகும்.  நீங்கள் உங்கள் குர்பானித் தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் வழங்கினால்  அதன் தொகை முறையாக ஏழைகளைச் சென்றடையும். நீங்கள் கட்சிகளுக்கு வழங்கினால் அவை முறையாக ஏழைகளைச் சென்றடையாது. உங்கள் குர்பானித் தோல்களை உங்கள் வீடு தேடி வந்து பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment