காலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89: 1, 2)
இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது...
(துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்(அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத் தவிர' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதி: 688
இஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை இறையருளால் நாம் அடைந்துள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புனித மாதங்களில் இந்த துல்ஹஜ் மாதமும் ஒன்றாகும்.மனித இனத்தின் உயர்வுகளுக்கு வழிகாட்டும் ஏக இறைமார்க்கம், இம்மாதத்திலும் மனிதர்கள் இறையருளையும் இறையச்சத்தையும் பெறுவதற்குண்டான நேரிய காரியங்களைக் கற்றுத் தருகிறது...
இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹஜ் மற்றும் அதன் கிரியைகளுக்கான காலகட்டம் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களிலேயே அடங்கியுள்ளது. இன்னும் உம்ரா, அரஃபா தின நோன்பு, பெருநாள் தொழுகை, குர்பானி போன்ற நல்லறங்களும் அல்லாஹ்வின் கிருபையால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களில் அனுகூலமாயிருப்பதை உணரலாம்.
மேலும், 'அறிமுகமான நாட்களில் அல்லாஹ்வி;ன் பெயரை நினைவு கூர்வர் (அல்குர்ஆன் 22:28) என்ற வசனத்திற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் விளக்கமளிக்கும் போது துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள் என்றார்கள். புகாரி-பாகம்1 பாடம் 11 - பக்கம் 731)
இந்த பத்து நாட்களைத் தொடர்ந்து வரும் 11, 12, 13 ஆகிய தினங்களை அல்லாஹ்வின் மார்க்கம் 'அய்யாமுத் தஷ்ரீக் என்று அடையாளப்படுத்துகின்றது. இதைப்பற்றி நபி(ஸல்) அவர்கள்....
துல்ஹஜ் பத்து நாட்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத்தஷ்ரீக் நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட சிறந்ததல்ல? என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜிஹாதை விடவுமா? என்று நபித்தோழர்கள் கேட்டனர். தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்து புறப்பட்டு இரண்டையும் இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 969
ஆக 'துல்ஹஜ் மாதம் புனிதமான ஒன்றாக இருக்க அதன் முதல் பத்து நாட்களிலும் அதையொட்டி வரும் அய்யாமுத்தஷ்ரீக் நாட்களிலும் நல்லறங்கள் செய்வது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான ஒன்றாகும். அடியார்கள் இந்த நல்வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நலம்பயக்கும். வசதி வாய்ப்புள்ளவர்கள் ஹஜ், உம்ரா
கிரியைகளை நிறைவேற்றுவது. ஹஜ்ஜுக்கு செல்லாதவர்கள் ஒன்பதாம் நாளான அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பதும் நபி வழியாகும்.
அரஃபா தினத்தில் (ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் நாள்) நோன்பு நோற்பது, அதற்கு முந்தைய ஒரு வருடம், அதற்கடுத்த ஒரு வருடம் ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுகதாதா(ரலி) நூல்: திர்மிதீ 680
பெருநாள்!
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைந்த போது,மதினாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரு நாட்களில் மதீனாவாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் இந்த இரு நாட்கள் எவ்வகையைச் சேர்ந்தது? எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அறியாமை காலத்தில் (இந்நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம் என்றனர். (அதைக்கேட்ட) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும், அவ்விரு நாட்களுக்குப் பதிலாகவும் அள்ஹா (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும், ஃபித்ரு (எனும் ரமளான் பெரு) நாளையும் வழங்கியிருக்கிறான் என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அபுதாவுத் 1004
அறியாமைக் காலத்திலிருந்த இரு நாட்களுக்குப் பகரமாக மாட்சிமைமிக்க அல்லாஹ் தன் அடியார்களுக்கு நல்கிய நாட்கள்தான் இந்த இரு பெருநாட்கள். இந்த இரண்டு நாட்களிலும் தொழுவது, குத்பா (பிரசங்கம்) நிகழ்த்துவதோடு வேறு சில காரியங்களைச் செய்வதும் நபிவழியாகும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உண்ணும் வரை ஈதுல்ஃபித்ர் பெருநாளன்று (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஈதுல் அள்ஹா பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1756
சூரியன் உதயமாகி தொழுவது தடுக்கப்பட்ட நேரம் முடிந்தபின் பெருநாள் தொழுகை தொழுவது நபி வழியாகும் என்பதை புகாரி, அபுதாவுது, இப்னுமாஜா, ஹாக்கிம் மற்றும் அல்பர்யாபி ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஈது (தொழுகை)க்கு நடந்தவர்களாக வந்து, (தொழுதபின்) நடந்தே திரும்பிச் செல்வார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் ஸஅது(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னமாஜா 1070
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்;முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி) நூல்: புகாரி 956
நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்கு) புறப்படச்செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள
பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகி இருப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி 974
நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பவர்:ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 960
நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி நாட்டப்படும். நபி(ஸல்) அவர்கள் அதை நோக்கி தொழுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) - புகாரி 972
(ஈதுல்)ஃபித்ருவிலும், (ஈதுல்)அள்ஹாவிலும் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் ருகூவின் தக்பீர் நீங்கலாக (இரண்டு ரக்அத்களிலும் கிராஅத்துக்கு முன்) ஏழு, ஐந்து தக்பீர்களை கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: ஸஹீஹ் அபூதாவுத் 1043
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜீப் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். 'யார் நமது தொழுகையை தொழுது, நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப்(ரலி) நூல்: புகாரி 955
நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு, மாடுகளையும், ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி 982
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள்.யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் மற்றொன்றை அறுக்கட்டும்! யார் அறுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்.!. என்றார்கள். அறிவிப்பவர்: ஜுன்தப்(ரலி) நூல்: புகாரி 985
பெருநாள் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும், வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 986
ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும், கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள். நான், ஆம் என்றேன். அவர்கள் என்னை தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) 'அர்பிதாவின் மக்களே! விளை யாட்டை தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்தபோது, உனக்கு போதுமா? எனக் கேட்டார்கள். நான், ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ என்றார்கள் அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) - புகாரி 950
இதுபோன்ற நன்னாளில் உடலுக்கும், மனதுக்கும் தெளிந்த ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி விளையாட்டுக்களை ஊக்குவிப்போமாக!
பெருநாட்களையும், திருநாட்களையும் வீணான கேளிக்கைகளிலும் ஆடம்பரங்களிலும் திளைத்துக் கழிக்கின்ற உலகோர்க்கு மத்தியில் அந்த தினங்களையும் இறைவனுக்கு உவப்பான வழிகளில் கண்ணியப்படுத்தச் செய்யும் மார்க்கத்தின் அம்சங்ளை கடைபிடிப்போமாக! அல்லாஹ் கருணையாளன்!
கூட்டுக் குர்பானி
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் அல்லாஹ்வுக்காக செய்ய நாங்கள் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும் உளுஹிய்யா (குர்பானி) வலியுறுத்தப்பட்ட கடமையாக உள்ளது.
இந்த கடமையில் ஏழைகளுக்கு உதவும் ஓர் அம்சமும் பொதிந்துள்ளது. இதனால்தான் வறுமை நிலவிய ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்குமேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார்கள். பின்னர் செழிப்பான நிலை ஏற்பட்டபின் நாயகம்(ஸல்) அவர்கள் இக்கட்டளையை திரும்பப் பெற்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியை பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் வினியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை அறுத்து, உரித்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அலி(ரலி), நூல்: புஹாரி(1717)
ஒரு பக்கம் ஏராளமாக குர்பானி கொடுத்துவிட்டு வாங்குவோரின்றி இறைச்சி சீரழிவதையும், இன்னொரு பக்கம் போதிய இறைச்சி கிடைக்காமல் ஏழைகள் அலைமோதுவதையும் காண்கின்றோம்.
இந்த ஏற்றத் தாழ்வை அகற்றும் நோக்கில் குர்பானியை இறைச்சி எல்லா வகையான மக்களுக்கும் சென்றடையும் வகையில் முறையாக வினியோகம் செய்ய கூட்டுக்குர்பானி முறையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை ஏற்பாடு செய்துள்ளது.
எனவே உங்களுக்கு குர்பானி கொடுக்க தகுதியிருந்து அதை முறையாக செய்ய முடியவில்லை எனில் அதற்குரிய தொகையை TNTJ மாநில தலைமைக்கு வழங்கினால் குர்பானிக்குரிய (உங்கள் விருப்பத்திற்கேற்ப) ஆடு, மாடு போன்றவற்றை வாங்கி அதை முறையாக வினியோகம் செய்ய TNTJ சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம். இதற்குரிய கணக்கு விபரங்கள் உணர்வு வார இதழில் இன்ஷா அல்லாஹ் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment