.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Wednesday, June 26, 2013

பாவியாக்கும் பராஅத் இரவு!

ஷஅபான் மாதத்தில், ஷபே பராஅத் என்கிற பெயரில், ஷஅபான் மாத 15ம் இரவில் மூன்று யாசின்கள் ஓதுவதும், சாப்பாடு, ரொட்டி போன்றவைகளை தயாரித்து அதை மற்றவர்களுக்கு புனிதம் என்கிற பெயரில் விநியோகம் செய்வதும் நடந்துக் கொண்டு வருகின்றனர். அதேப்போல் மறுமையில் நன்மை என்கிற எண்ணத்தில் அன்றைய இரவில் 100 ரக்அத்கள் நின்று வணங்குவதும் இஸ்லாமியர்களிடத்தில் நடைபெற்று வருகின்றன செயலாகும்.

ஒரு செயல் மார்க்கத்தின் பெயரால் நடைபெற வேண்டுமானால், அதை அல்லாஹ்வோ அல்லது அவனின் திருத்தூதர்(ஸல்) அவர்களோ காட்டித் தந்திருக்க வேண்டும். அவர்கள் காட்டித் தராத எந்தவொரு செயலும் மார்க்க அங்கீகாரமாக ஆகாது என்பதை நினைவில் நிலை நிறுத்திக் கொண்டு, இந்த பராஅத் இரவு அமல்கள் நமக்கு மறுமையில் சாந்தியை பெற்றுத் தருமா? அல்லது சாபத்தை பெற்றுத் தருமா? என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த ஷபேபராஅத் இரவை கொண்டாடி மகிழும் சகோதரர்கள், குறிப்பாக இந்த இரவில் கிடைக்கும் வகை வகையான சாப்பாடுகளுக்கும், தின்பண்டங்களுக்கும் ஆசைப்படும் உலமாக்கள் போர்வையில் இருப்பவர்கள், தங்களின் இந்த அனாச்சாரமான, நபிமொழிக்கு முரணான செயலுக்கு ஆதாரமாக திருக்குர்ஆனில் அல்லாஹ் சிறப்பித்துள்ள இரவை இந்த இரவு தான் என்று திரித்துக் கூறி சமூகத்தை வழிகெடுக்கின்றனர்.

அதாவது அல்லாஹூதஆரா தன்திருமறையில்:

இதை (திருக்குர்ஆனை) பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். (அல்குர்ஆன்: 44:3)

அதாவது, இந்த வசனத்தின் அடிப்படையில், பாக்கியமுள்ள இரவு என்பது, ஷஅபான் மாதம், 15ம் இரவாகும். அது தான் பராஅத் இரவாகும். அதனால் இந்த இரவில் நின்று வணங்க வேண்டும் என்று கூறி அதன்படி செயல்பட்டும் வருகின்றனர்.

ஆனால் அல்லாஹூதஆலா இந்த திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தையும்,இரவையும் வேறு வசனங்களிலும் சொல்லியுள்ளான். அவைகளையும் இந்த வசனத்தோடு ஒப்பிட்டு விளங்குவோமேயானால் இவர்கள் எந்தளவிற்கு மார்க்கத்தில் விளையாடியுள்ளனர் என்பது புரிந்து விடும்.
இக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தையும் இரவையும் தன் திருமறையில்:
இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (திருக்குர்ஆன்: 2:185)
மகத்துவமிக்க இரவில் (லைலத்துல் கத்ர்) இதை (குர்ஆனை) நாம் அருளினோம். (அல்குர்ஆன்டு 97:1)
அதாவது இந்த மூன்று வசனங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, இந்த திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில், லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது என்பது விளங்குகிறது.
அதனால்தான், இக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் நோன்பு நோற்குமாறும், அந்த இரவில் நின்று வணங்குமாறும் அந்த இரவிற்கு 1000 மாதங்களை விட சிறப்புண்டு என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
லைலத்துல்கத்ர் இரவில் நின்று வணங்கவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் கட்டளைகள் நமக்கு காணக்கிடைக்கின்றன. ஆனால் இவர்கள் சொல்ல கூடிய இந்த பராஅத் இரவில் நின்று வணங்க வேண்டும் என்று வருகின்ற அனைத்து செய்திகளும் ஆதாரமற்றவையாக காணக் கிடைக்கின்றன.
அப்பேர்ப்ட்ட ஆதாரமில்லாத செய்திகளின் தரங்களைப் பார்ப்பதற்கு முன் மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் அனாச்சாரங்களின் நிலை என்னவென்பதை பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவர் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும். (ஆயிஷா(ரலி) புகாரி 2697)
நமது அனுமதியில்லாமல் ஓர அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும். (முஸ்லிம் 3243)
மேலும், இம்மார்க்கத்தில் நற்செயல் என்று ஒன்றை கூட்டவோ அல்லது தீயச்செயல் என்று ஒன்றை குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை என்றும், அவ்வாறு செய்பவர்கள் நரகில் புகுவார்கள் என்றும் நபிமொழி எச்சரிக்கை செய்கின்றது.
செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத்தாகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஓவ்வொரு வழிகேடும் நரகில் சேர்க்கும் ( ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) இப்னு குஸைமா 1689)
மேலும் இப்படி பித்அத்களை செய்பவர்கள் சஹாபாக்களாக இருந்தாலும் நஷ்டமடைவார்கள் என்பதையும் உணர வேண்டும்.
மறுமைநாளில் நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்) தடாகத்திற்கு சென்று காத்திருப்பேன். என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் தடாகத்தை விட்டும் தடுக்கப்படுவார்கள். உடனே நான் இறைவா! என் தோழர்கள் என்பேன். அப்போது, முஹம்மதே! உங்களுக்கு பின்னால் இவர்கள் புதிதாக உருவாக்கியது குறித்து உங்களுக்கு தெரியாது. இவர்கள் திரும்பி பார்க்காமல் வந்தவழியே சென்று விட்டார்கள் என்று கூறப்படும். (புகாரி 6575, 6585)
மேலும் அதுமட்டுமின்றி இந்த பராஅத் இரவை கொண்டாடி வரும் சகோதரர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு மத்ஹபை பின்பற்றக்கூடியவர்களாக தான் உள்ளனர். அவர்கள் பின்பற்றும் மத்ஹப்களாவது இந்த இரவை கொண்டாடி மகிழுங்கள் என்று சொல்லியுள்ளதா என்றால், செய்யக் கூடாது என்று தான் சொல்கின்றன.
ரஜப் மாதத்தில் முதல் ஜூம்மாவில் மக்ரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் தொழுகையும், ஷஅபான் மாதம் 15வது இரவில் 100 ரக்அத் தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதைச் செய்யக் கூடியவர் பாவியாவார். இதை தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

(ஷாபி மதஹ்பவுடைய நூலான: இஆனதுல் தாலீபின்: முதல் பாகம்: பக்கம் 27)
பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் மின் விளக்குகளை வைப்பது அனாச்சாரமாகும். (ஹனபி மத்ஹப் நூல்: பஹ்ருர் ராஹிக் 5ம் பாகம்: 232ம் பக்கம்)
ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஷாபி மத்ஹப் நூல்: இஆனதுல் தாலிபீன் பாகம் 2: பக்கம் 273)
மேலும் இந்த பராஅத் இரவின் சிற்ப்புக்களைப் பற்றியும், அதன் வணக்கவழிபாடுகள் பற்றியும் வரக்கூடிய அனைத்து ஹதிஸ்களும் பலவீனமானவையாகத் தான் உள்ளன.
ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்துவிட்டால் அதில் நீஙகள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்புப் பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்தில் இருந்து இநங்கி வந்து பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களைப் போக்குகிறேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டிருக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அலி (ரலி) இப்னுமாஜா 1378)
இது ஆதாரபூர்வமான ஹதிஸ் அல்ல. இது இட்டுக்கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீ ஸப்ரா என்பவர் இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும் இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.
அஸ்பஹானி தம்முடைய அத்தர்கீப் நூலில் (1831) மற்றொரு அறிவிப்பாளர் வழியாக பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபி(ஸல்) அவர்கள் கூறாததை இட்டுக்கட்டிக்கூறுபவர் என இமாம் அபூஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு படுக்கையில் நபி(ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்றுக் கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ம் நாள் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ஃப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவிற்கு பாவங்களை மன்னிக்கிறான் என்று கூறினார்கள். (ஆயிஷா(ரலி) திர்மதி 670)
இந்த ஹதிஸூம் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஜீர் என்பவர் உர்வாவிடமிருந்து கே;டகவில்லை. அதே போன்று ஹஜ்ஜாதஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரி கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மதி இமாம் அவர்களே தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
ரமளான் மாதம் 15ம் இரவிலும், ஷஅபான் 15ம் இரவிலும் சூரத்துல் இக்லாஸ் எனும் சூராவை 100 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்குச் சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார். (முஹம்மது பின் அலீ (பலாயிலுரமளான், இப்னு இபீத்துன்யா பாகம்1 பக்கம் 10 எண்:9)
இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மது பின் அலீ என்பவர் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி(ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளார் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள். இது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்:2 பக்கம் 129) குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று உன விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தை செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைவச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்களை உருவாக்குதவற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்:1 பக்கம் 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில் இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கைச் செய்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப்போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவனைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். (அறிவிப்பாளார்: அதாவு பின் யஸார் : நூல் முஸன்னப் இப்னு அபீஷைபா 9764: பலாயிலுர் ரமளான் இப்னு அபீத் துன்யா பாகம் 1 பக்கம் 9: எண்: 8 இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழாதவர். நபி(ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார்.
இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக உள்ள அப்துர்ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல் மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக்கால கட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார் அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமருந்து அறிவிப்வவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் எனபவராவர். ஆல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீன்மான நிலையை அடைகிறது.
அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள். நீதிபதியாக இருந்த ஸியாதன் மன்கிரிய்யு என்பவர், ஸஅபான் 15ம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்pகா அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்த பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று அபீ முலைக்கா அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் பாகம் 4: பக்கம் 317)
முஹம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாராக் அவர்களிடம் ஷஅபான் 15ம் இரவில் அல்லாஹ் இறங்குவதைப் பற்றி கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்கள் பலவீனமானவனே! 15ம் இரவு பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும். அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகின்றான் என்று கூறினார்கள். (நூல்: அகீததித் ஸலஃப் அஸஹாபுல் ஹதீஸ் பாகம்: 1 பக்கம்: 12 )
ஆகவே சகோதரர்களே! பராஅத் இரவு சம்பந்தமான வரக்கூடிய அனைத்து ஹதிஸ்களும் ஆதராமற்றவையாகவும், இட்டுக்கட்டபட்டவையாக இருப்பதாலும், இப்படி ஒரு செயல் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் செயல்படுத்தபடாததாலும் இதனை விட்டும் விலக வேண்டும்.

மேலும், மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை, அது எவ்வளவு தான் நன்மையான செயலாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் காட்டிதராத செயலாக இருந்தால் நிராகிரிக்கப்படும் என்கிற நபிமொழியின் அடிப்படையில், கொஞ்சம்கூட மார்க்ச ஆதாரமில்லாத இந்த பராஅத் இரவின் வணக்கங்களை செயல்கபடுத்தி பாவியாகி நரகம் செல்லும் நிலையில் நம்மையும் நம் சமூகத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதற்கு அல்லாஹூதஆலா நம்மனைவருக்கும் நற்கிருபை செய்வானாக.

No comments:

Post a Comment