.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Saturday, February 23, 2013

* குழந்தைகளின் பேச்சுக்கு செவிகொடுங்கள்...

''பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கிறோம்ல்ல.. தொந்தரவு பண்ணாத..'' 
இப்படி ஒரு டயலாக்கை இன்று வரையிலும் சொல்லாத அம்மாவா நீங்கள்? உங்கள் முதுகில் நீங்களே ஒரு ஷொட்டு கொடுத்து கொள்ளுங்கள்.

''நீங்கள் எவ்வளவு முக்கியமான விஷயத்தை வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம். அப்போது, குழந்தைகள் உங்களிடம் ஏதாவது சொல்ல வந்தால் ''தொல்லை'' என்று கருதி விரட்டாமல், அவர்களுக்கும் கொஞ்சம் காது கொடுங்கள்.

குழந்தைகளுக்காக நீங்கள் ஒதுக்கும் அந்த சில நிமிட இடைவெளியால் உங்களின் பேச்சுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் வந்து விடாது. ஆனால், உங்களின் இந்தப் புறக்கணிப்பு தொடர்ந்தால், ஒரு கட்டத்தில் நீங்கள் காது கொடுத்தாலும் உங்களிடம் பேசுவதற்கு உங்கள் குழந்தைகள் தயாராக இருக்க மாட்டார்கள்!'' என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி.. கூடவே, அப்படி ''தொந்தரவு'' செய்வது குழந்தையைப் பொறுத்தவரையில் எத்தனை நியாயமானது என்பதையும் விளக்குகிறார்.

''நாம் பெரியவர்கள், பிறர் பேசும்போது நடுவில் குறுக்கிடக் கூடாது என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், அவர்கள் குழந்தைகள்.. அதெல்லாம் தெரியாதுதான். அதை அவர்களாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதிலும் எந்த நியாயமும் இல்லை. அவர்களின் உலகத்துக்கான அறிவோடு தான் அவர்கள் செயல்படுவார்கள்.

டி.வி பார்த்துக் கொண்டோ, விளையாடிக் கொண்டோ இருக்கும்போது திடீரென்று அவர்களின் மனதில் ஏதாவது தோன்றும். அதை அப்படியே உடனடியாக தனக்கு ரொம்பவும் பிடித்தமான தன் அம்மாவிடமோ, அப்பாவிடமோதான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்தக் குறுக்கீடு ஒரு தவறல்ல. அவர்களின் இயல்பு. இதை பெரியவர்களான நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வகை குழந்தைகள் ஒரு ரகம் என்றால், நம் கவனத்தைத் திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே வந்து குறுக்கிடும் குழந்தைகள் இன்னொரு ரகம்!'' என்ற ஜெயந்தினி, அப்படிப்பட்ட குழந்தைகளைப் பற்றியும் விவரித்தார்.

''பொதுவாக, தன் அம்மாவின் கவனம் தன் மீதுதான் இருக்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவார்கள். நாம் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்கும்போது, ''அம்மா நம்மளை கவனிக்காம அப்படி என்ன அந்த ஆன்ட்டி கூட பேசிட்டு இருக்காங்க..'' என்று அவர்களின் மனதுக்குள் ஒரு பொசஸ’வ்னெஸ் ஏற்படுவது இயல்புதான். விளைவு.... எப்படியாவது நம் கவனத்தை ஈர்ப்பதற்காக, பேச்சில் குறுக்கிடுவார்கள். அப்போதும் அவர்களை நாம் கவனிக்காத பட்சத்தில், டம்ளர் தண்­ரை தரையில் ஊற்றுவது, பொம்மைகளை தூக்கிப் போட்டு உடைப்பது.. போன்ற சில எதிர்மறையான செயல்களில் ஈடுபடலாம்!'' என்று விளக்கினார்.

அவரிடம், ''நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் டாக்டர். ஆனால், யாருடனும் எதுவுமே பேச விடாமல், நச்சரிக்கும் பிள்ளைகளை என்னதான் செய்வது?'' என்று அம்மாக்களின் சார்பாக பிராக்டிகல் பிரச்சினையை முன்வைத்தோம். அருமையான ஆலோசனை தந்தார் ஜெயந்தினி..

''அப்படி அவர்கள் நடுவில் வந்து பேசும் போது, ''அம்மா இப்போ வந்துடறேன்டா.. அதுவரைக்கும் நீ உனக்குப் பிடிச்ச வாட்டர் கலரிங் பண்ணிட்டு இருக்கியா..?'' என்று கேட்டு, பேப்பர், பிரெஷ், கலர்ஸ் எல்லாவற்றையும் கையோடு எடுத்து அவர்களிடம் கொடுங்கள். பிறகு, ''அம்மா ஒரு முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன் செல்லம்.. பேசி முடிச்சிட்டு, நீ சொல்றதைக் கேக்கறேன்.. சரியா?'' என்று அன்புடன் சொல்லுங்கள். அப்போது அவர்களின் கவனம் திசை திரும்பும். இப்போது உங்கள் உரையாடலை தொடரலாம். போகப் போக, இது அவர்களுக்கே பழகி, நீங்கள் பேசும் போது குறுக்கிடவே மாட்டார்கள்!'' என்றவர், அடுத்து சொன்ன விஷயம் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் பதித்துக்கொள்ள வேண்டியது.

''சில விஷயங்களை குழந்தைகள் அருகில் இருந்தால் பேசவே கூடாது. இதற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

ஒருமுறை, இரு பெண்கள் தங்கள் குழந்தைகளின் ஆசிரியைகளைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒருவரின் குழந்தை அங்கு வர, பேச்சு சுவாரஸ்யத்தில் அந்தப் பெண்மணி தன் குழந்தையிடமே, ''க்ரெயான்ஸ், ஸ்கெட்ச்னு ஒவ்வொண்ணா வாங்கிட்டு வரச் சொல்றதுதான் இவங்க மிஸ்ஸ•க்கு வேலை. இதையெல்லாம் வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் அவங்க பிள்ளைகளுக்குக் கொடுப்பாங்க போல..'' என்று அநாகரிகமாக ஒரு கமென்ட்-ஐ சொல்லி விட்டார்.

குழந்தை அல்லவா? அடுத்த நாள் தன் அம்மாவின் கமென்ட்டை அப்படியே ஆசிரியையிடம் ஒப்பித்து விட்டது. கடைசியில், குழந்தையின் அம்மாவுக்கும் ஆசிரியைக்கும் இடையே பெரும் பிரச்சினையாகி விட்டது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், கடைசிவரை தவறு தன்மீதுதான் என்பது புரியாமல், அந்த அம்மா குழந்தையிடம் கோபத்தைக் காட்டியதுதான். அதன் பிறகு அந்தக் குழந்தை ஆசிரியையிடம் மட்டும் அல்ல.. வேறு யாருடனும் கூட எந்த விஷயத்தையுமே பகிர்ந்து கொள்ளமால் போய், அதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டு, குழந்தையின் படிப்பு, இயல்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டு விட்டது.

அந்த நிலையில்தான் என்னிடம் அந்தக் குழந்தையை அழைத்து வந்தார்கள். அதன் அம்மாவுக்கு ஆலோசனை கொடுத்து அவர் தன்னை நிறையவே மாற்றிக் கொண்ட பிறகுதான் குழந்தை நார்மலுக்கு வந்தது. தேவையில்லாத பேச்சில் குழந்தையையும் இணைத்ததன் விளைவு இது!'' என்று சொன்ன ஜெயந்தினி இறுதியாகச் சொன்ன விஷயம் மிகவும் நுட்பமானது.

''போனில் பேசுவதற்கு எல்லாக் குழந்தைகளுக்குமே மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு யார் போன் செய்தாலும், இடையில் புகுந்து, ''நான் பேசுறேன்..'' என்று போனைக் கேட்டு நச்சரிப்பார்கள்.

இந்த நேரத்தில் பெரும்பாலான அம்மாக்கள் செய்கிற தவறு. குழந்தையின் முதுகில் ஒரு அடி வைத்து, ''பேசிட்டு இருக்கேன்ல.. போ அந்தப் பக்கம்..'' என்று அதட்டுவது. இப்படிச் செய்தால், குழந்தை இன்னும் பீறிட்டு அழவே செய்யும்!

இதை எளிதாகத் தவிர்க்கலாம். குழந்தையிடம் விளையாடும் நேரத்தில், ''எல்லார்கிட்டயும் நீ பேச முடியாது. ஆனா, உனக்குப் பிடிச்ச ஆன்ட்டி பேசும் போது உன்கிட்ட தர்றேன்'' என்று தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். குழந்தை முதலில் சிணுங்கினாலும் அதைப் புரிந்து கொள்ளும்.

பிறகு, போனில் பேசுகிறவர் நன்கு அறிமுகமானவர் எனில், ஆரம்பத்திலேயே அவரிடம், ''என் குழந்தைகிட்ட ஒரு நிமிஷம் பேசிடுங்க.. ரொம்ப ஆசைப்படுறா..'' என்று சொல்லி, போனை குழந்தையிடம் கொடுங்கள். சில விநாடிகளிலேயே ஆர்வம் அடங்கி, குழந்தை போனை உங்களிடம் தந்து விடும். நாளடைவில் அதற்கு போன் பேசுவதில் உள்ள ஆர்வமும் குறைந்து விடும்!'' என்றார்.

''இதென்ன.. தொல்லை'' என்று எப்போதாவது இந்த வாய் சொல்லி விடலாம். ஆனால், பத்து மாதம் சுமந்திருந்த அந்த பந்தத்தை எப்போதாவது மனதார தொல்லையாக நினைப்போமா என்ன..?

அந்தப் பாசத்தால் ஆள்வோமே குழந்தைகளை!

No comments:

Post a Comment