பதில் : ஸக்காத் எட்டுக் கூட்டத்தினருக்கு உரியது என்று திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும்,உஹ்ள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 9:60)
1. யாசிப்பவர்கள் 2. ஏழைகள். 3. ஸகாத்தை வசூல் செய்பவர்கள் 4. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் 5. அடிமைகளை விடுதலை செய்வதற்கு 6. கடன் பட்டவர்கள் 7. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதல் 8. நாடோடிகள். ஆகியோராவார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள். நூல்: புகாரி (1395)
செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஏழைகள் என்றால் தேவையுடையவர்கள் என்று பொருளாகும். மேற்கண்ட 9:60 வசனத்தில் கூறப்பட்டவர்களில் அனைவருமே தேவையுடையவர்களாகத் தான் உள்ளனர். அதன் காரணமாகத் தான் நபியவர்கள் பொதுவாக செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
யாசிப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் வித்தியாசம்.
மேற்கண்ட 9:60 வது வசனத்தில் யாசிப்பவர்கள் என்பதற்கு அரபியில் “ஃபுகரா” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது “ஃபகீர்” என்ற சொல்லின் பன்மையாகும். “ஃபகீர்” என்ற சொல்லிற்கு தேவையுடையவன் என்பது நேரடிப் பொருளாகும். ஏழைகள் என்பதற்கு அரபி மூலத்தில் “மஸாகீன்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது “மிஸ்கீன்” என்ற சொல்லின் பன்மையாகும்.
மிஸ்கீன் என்றால் யார் என்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்கடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், “அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள்” எனும் (இந்த 2:273வது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (4539)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனது நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான். (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி(1479)
மேற்கண்ட ஹதீஸ்களில் ஏழை என்பதற்கு அரபி மூலத்தில் மிஸ்கீன் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதாவது மிஸ்கீன் என்பவன் தன்னுடைய வறுமை நிலையை யாரிடமும் வெளிப்படுத்தாமல், பிறரிடம் யாசகமாகக் கேட்பதற்கு வெட்கப்பட்டு, தன்மானத்துடன் வாழ்பவராவார். இவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஸகாத்தை வழங்குவது முஃமின்கள் மீது கடமையாகும்.
ஆனால் ஃபகீர் என்பவரும் வறுமை நிலையில் உள்ளவர் தான். ஆனால் இவர்கள் தங்களின் நிலையை வெளிப்படுத்தி உதவி கேட்பார்கள். அல்லது அவர்களின் வறிய நிலைமை வெளிப்படையாகத் தெரியும். ஒருவர் இந்நிலைக்கு உள்ளாகும் போது அவனது தனது நிலைமையை வெளிப்படுத்தி ஸகாத்தைப் பெறுவது மார்க்கத்தில் குற்றமாகாது.
அடுத்ததாக ஒரு பெண்ணின் திருமண செலவுக்கு ஸக்காத் கொடுக்களாமா? அல்லது அது ஸதகாவில் தான் சேறுமா?
திருமண செலவுக்கு ஸக்காத் உரியது என்று குர்ஆன், சுன்னாவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. திருமண செலவுக்காக என்ற ஸக்காத் நிதியை யாரும் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தக் கூடாது.
இதே நேரம் திருமண செலவுக்கு தர்மம் செய்யலாமா என்ற கேள்வி எழுகிறது. தற்காலத்தில் பெண்களை திருமணம் முடித்துக் கொடுப்பதற்காக செலவுக்கு உதவி கேட்பவர்கள், வரதற்சனைத் தொகையை வழங்குவதற்காகத் தான் பெரும்பாலும் அந்த உதவியை நம்மிடம் கேட்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவது நமக்கு நன்மையைத் தருவதற்கு பதிலாக தீமையைத் தான் பெற்றுத் தரும்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும்,வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல் குர்ஆன் 5-1)
from rasminmisc.com
No comments:
Post a Comment