எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன்.
இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர்,தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான்.அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர். இந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் நபி மூஸா(அலை) அவர்கள்.ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததோடு ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு நபி மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.
ஃபிர்அவ்னின் சர்வாதிகார ஆட்சி
மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்குக் கூறுகிறோம். ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். (அல்குர்ஆன்: 28:3,4)
மூஸா நபியின் பிறப்பு
பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த போது, நபி மூஸா(அலை) அவர்கள் பிறக்கின்றார்கள். நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்த காலகட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.
நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவரைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த நபி மூஸா(அலை) அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு பெட்டியில் வைத்து, கடலில் போட்டு அனுப்பி விடுகின்றார்கள். அதன் பின் அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது.இந்த வரலாற்றை வல்ல அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்..
தன் பகையை தானே வளர்த்த ஃபிர்அவ்ன் அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான் (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று இக்குழந்தையை பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும் அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர்.மூசாவே பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர். (அல்குர்ஆன் 20:38-40)
நபித்துவம் வழங்கப்படுதல்
மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன்.அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன் என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார். அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் என்று அழைக்கப்பட்டார்.(அல்குர்ஆன்:; 28:29-30)
இரு பெரும் அற்புதங்கள்
உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும்பாம்பாகக் கண்ட போது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார்.மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக! இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர் (என்று இறைவன் கூறினான்).என் இறைவா! அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன்.எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன் என்று அவர் கூறினார்.என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பி வை! அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன் (என்றும் கூறினார்).(அல்குர்ஆன்: 28:31-34)
உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்குச் சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்றுகளுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும் உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள் என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்: 28:35)
ஃபிர்அவ்னின் ஆணவம்
மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். பெரும் பொய்யரான சூனியக்காரர் என்று அவர்கள் கூறினர் (அல்குர்ஆன்: 40 : 23-24)
ஒடுக்கப்பட்டோருக்காக உரிமைக்குரல்
ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர் என்று மூஸா கூறினார். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்)கூறாதிருக்கக் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக்கொண்டு வா! என்று அவன் கூறினான்.அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்? என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 7: 104-110)
போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள்
இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள் என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர். சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா? என்று அவர்கள் கேட்டனர். (அதற்கவன்) ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள் என்று கூறினான். மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா? என்று கேட்டனர். ''நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள் மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள்.பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். ''உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர். (அல்குர்ஆன்: 7:111-119)
இஸ்லாத்தை ஏற்ற சூனியக்காரர்கள்
சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம் என்றும் கூறினர். (அல்குர்ஆன்: 7:120-122)
ஃபிர்அவ்னின் ஆணவப்போக்கு
நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்! என்று ஃபிர்அவ்ன் கூறினான்.உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன் (என்றும் கூறினான்).(அல்குர்ஆன்: 7:123,124)
பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை என்று ஃபிர்அவ்ன் கூறினான். ஹாமானே! எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன் என்றான். (அல்குர்ஆன்: 28:38)
நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான். ( அல்குர்ஆன்: 79:24)
சூனியக்காரர்களின் ஈமானிய உறுதி
நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்புபவர்கள் என்று அவர்கள் கூறினர்.எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய் (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ,எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக! என்றனர்.(அல்குர்ஆன்; 7:125, 126)
என் இறைவன் அல்லாஹ்வே என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர்உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான் என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது
நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கைக் கொண்ட ஒருவர் கூறினார். (அல்குர்ஆன்: 40:28)
கடல் பிளந்தது, கொடியவன் கொல்லப்பட்டான்
அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள்புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம். (அல்குர்ஆன்: 28:5,6)
காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்.உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும்,அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். (அல்குர்ஆன்: 26:60-66)
காலம் கடந்த ஞானோதயம்
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம் என்று கூறினான்.இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். (அல்குர்ஆன்: 10:90,91)
அழியாத அத்தாட்சி
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை.உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். (அல்குர்ஆன்: 10:92,93)
கொடுங்கோலன் பிர்அவ்னை வல்ல அல்லாஹ் அழித்த நாள் தான் ஆஷுரா எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும். திருக்குர்ஆன் கூறும் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாள் கர்பலா நிகழ்ச்சியில் கரைந்து போய் விட்டது. ஆஷுரா நாள் என்றாலே ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) அவர்களுக்குச் சொந்தமான நாள் என்பது போன்ற மாயை மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டு விட்டதே!
எல்லாம் வல்ல ரஹ்மானின் அருட்கொடைகளையும், ஆற்றலையும் கடந்து போன அந்த சமுதாயத்தின் தியாக வரலாற்றிலிருந்து உணர்ந்து ஏகத்துவச் சிந்தனையை வலுப்படுத்திக் கொள்ளவேண்டிய நம் சமுதாயம், அதைக் கண்டு கொள்ளாமல் கர்பலாவின் பெயரையும், பஞ்சா போன்ற அனாச்சாரங்களையும் உரத்துச்சொல்லி கைசேதப்பட்டு நிற்கிறது. அல்லாஹ் காப்பானாக!
No comments:
Post a Comment